
கீழடி அகழ்வாராய்ச்சிக்காக நியமிக்கப்பட்ட புதிய தொல்லியல் துறை இயக்குநர் ராமனும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கீழடி அகழ்வராய்ச்சி பணியின் போது கிடைத்துள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இருக்கும் தனியார் தென்னந்தோப்பில் பண்டைய மதுரை நகர் குறித்து அகழ்வராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் வேதாசலம், ராஜேஷ், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 1600 பண்டைய பொருட்கள் கண்டறியப்பட்டன. ரோமானிய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள், கலைநயம் மிக்க மருந்து பொருள் பானை, தண்ணீர் செல்லும் வாய்க்கால், நீண்ட சுவர்கள், அகலமான செங்கற்கள், குடுவைகள், பாசிகள், முத்துகள், கல் ஆயுதங்கள், கல்லாய் போன மனித எலும்புகள், சங்கு வளையல்கள், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த உறை கிணறுகள் கண்டறியப்பட்டன.
இதற்கிடையே அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்திய அரசு திடீரென மாற்றியது. அவருக்கு பதிலாக ராமன் என்பவர் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழர்களின் பண்டைய நாகரிகங்கள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கீழடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன. கீழடி ஆகழ்வாராய்ச்சிக்காக மத்திய அரசு 40 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
கீழடியில் ஆராய்ச்சி மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்.அதன்படி அமர்நாத் மாற்றப்பட்டு ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தொல்லியல் துறை இயக்குநர் ராமனும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான்." இவ்வாறு மகேஷ் சர்மா குறிப்பிட்டார்.