Tamil Nadu fishermen : மீனவர்கள் தாயகம் திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன..?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

By Thanalakshmi VFirst Published Dec 29, 2021, 3:18 PM IST
Highlights

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ள திருமுருகன் என்பவர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தது 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அவமதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல் படையால் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். மேலும் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே, இலங்கைக் கடற்படை, கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்தியா கொண்டுவருவது தொடர்பாக, இலங்கை வெளியுறவு துறையை தொடர்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இதுக்குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஜனவரி மாத தொடக்கத்திலே 68 மீனவர்களும் தாயகம் திரும்ப வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் 
 
இதனிடயே இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஜனவரி 1ல் ரயில் மறியல் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

click me!