
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் மேல் நிலைப்பள்ளி, மற்ற பள்ளிகளைவிட சற்று மாறுபட்டதாக இருக்கிறது. அங்குள்ள சீருடை, மாணவர்களின் படிப்பு, கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் போன்றவை இந்த சமுதாயத்துக்கு நல்ல மாணவ-மாணவிகளை உருவாக்கித்தரும் வகையில் அமைந்துள்ளது.
மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ளது அந்த சற்று பெரிய கிராமம். டி.கல்லுப்பட்டி என்ற அந்த ஊரில் தான் காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தி மகானை பெரும்பாலோனோர் மறந்துவிட்ட நிலையில் அவரின் அடிநாதங்களை ஒட்டி இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிதான் இது. அத்தகைய பழமை வாய்ந்த பள்ளி இன்றும் கம்பீரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சீருடை என்ன தெரியுமா ? வேட்டி சட்டை தான் ! அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றும்.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ அல்ல கதர் வேட்டிதான். வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பள்ளியில் ஆசிரியைகளை ‘அக்கா’ என்றும், ஆசிரியர்களை ‘ஐயா’ – என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் அந்த பாசமிகு மாணவ- மாணவிகள். தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.
வகுப்பு மாணவர்கள் சீருடையாக வேட்டி, சட்டை அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள். சிறு குழந்தைகளும் கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள். திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை இந்த மாணவர்கள் பாடுகிறார்கள்.
ஒவ்வொரு புதன் கிழமை தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிக்கிறார்கள் இந்த மாணவர்கள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது அவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.அந்த அளவுக்கு காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார்கள்.
பொதுத் தேர்வில் பங்கு பெறும் மாணவர்கள் தங்களது பெற்றோரைப் பள்ளிக்கே அழைத்து வந்துபாத பூஜை செய்யும் வழக்கமும் இங்கே உண்டு.பல நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள இந்தப்பள்ளி தங்கள் பகுதியில் இருப்பது பெருமை என கூறுகின்றனர் டி.கல்லுப்பட்டி பொது மக்கள்.