பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published : Mar 20, 2024, 08:08 PM IST
பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சுருக்கம்

தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தேசிய கட்சியான பாஜக தற்போது மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ளது. இக்கட்சிக்கு தேர்தல் ஆனையம் தாமரை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர், தேசிய மலரான தாமரையை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எனது மனு மீது இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையத்தின் இந்தச் செயல், இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இந்த மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது, தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா? தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது? என சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது.

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று  தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் பாஜகவின் சின்னமாக தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறி தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரத்தை சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தவும், மீதித் தொகையை மனுதாரர் பெற்றுக்கொள்ளவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்