நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது.. 3 நாட்களாக தூக்கம் இல்லை-அமைச்சர்கள் மீதான வழக்கில் நீதிபதி அதிரடி

Published : Aug 23, 2023, 12:20 PM ISTUpdated : Aug 23, 2023, 12:26 PM IST
நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது.. 3 நாட்களாக தூக்கம் இல்லை-அமைச்சர்கள் மீதான வழக்கில் நீதிபதி அதிரடி

சுருக்கம்

சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி இரண்டு அமைச்சர்களுக்கும் லஞ்ச ஒழிபுத் துறைக்கும்  உத்தரவிட்டுள்ளார்.  

கேகேஎஸ்எஸ்ஆர் மீது சொத்து குவிப்பு வழக்கு

திமுகவின் கடந்த ஆட்சி காலமான 2006 முதல் 2011 ஆம் ஆண்டில்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக  வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விவரங்களை கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்  உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.

தங்கம் தென்னரசு மீதும் வழக்கு

இதே போல அதே ஆண்டு காலத்தில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக  76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில். அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில்  வழக்கு தொடர்ந்ததாகவும் எனவே,  சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. 

அமைச்சர்களை விடுவித்த நீதிமன்றம்

இந்த நிலையில் இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.  இந்த  வழக்குகள்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த 2021ம் ஆண்டு இந்த வழக்குகளில் தங்களை விடுவிக்க கோரி தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் கோரிய மனுக்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்கு பின், இந்த வழக்கில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்கில் உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த விவகாரத்தில்  நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும், இதை அனுமதித்தால் கடமை தவறியதாகி விடும் எனவும் குறிப்பிட்டார். இந்த வழக்கின் உத்தரவால் 3 நாட்களாக தூங்கவில்லை எனவும் குறிப்பிட்டார். 

3 நாட்களாக தூங்கவில்லை

அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை என்றார். அதற்கு, வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதாகவும், உண்மையில் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம்  அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். 

பதில் அளிக்க நீதிபதி உத்தரவு

இந்த நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். இதற்கு முன்பாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி, தாமாக  முன் வந்து அந்த வழக்கையும்விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Onion Price: தாறு மாறா குறையப்போகும் வெங்காயம் விலை! மூட்டை மூட்டையாய் வாங்கிச்செல்ல நேரம் வந்தாச்சு.! என்ன காரணம் தெரியுமா?
Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?