தர்மபுரி மாவட்டத்தில் உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கூறி காதல் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சாணார் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சீனிவாசன். பட்டதாரியான இவர் பாலகோடு பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் மணி. இவரது மகள் நர்மதா (வயது 20). இவர் நர்சிங் பார்மசி படித்து வருகிறார். இந்த நிலையில் சீனிவாசனும், நர்மதாவும் கடந்து ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரின் காதல் நர்மதாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நர்மதாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த நர்மதா காதலன் சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இருவரும் கடந்த 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டனர்.
750 ஆண்டு பழமையான சோழர்கால சிவலிங்கத்தை மீட்ட சிவனடியார்கள்
தகவல் அறிந்து வந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சீனிவாசனின் குடும்பத்திற்கும், சீனிவாசனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காதல் ஜோடிகள் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகளை பெண்ணின் வீட்டார் ஏற்றுக்கொள்ளாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அசந்து தூங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்; டேங்கை நிரப்பிக்கொண்டு ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்