Kallakurichi : விஷச்சாராய மரணம்.. தமிழக அரசு ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? நீதிபதிகள் சரமாரி கேள்வி

By Ajmal Khan  |  First Published Jun 21, 2024, 2:27 PM IST

கள்ளக்குறிச்சி பகுதியில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக அரசுக்கு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷச்சாராய பலிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜூன் 26 ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


விஷச்சாயாராயம் மரணம்- சிபிஐ விசாரணை

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராய அருந்தி இதுவரை 51பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையிலை சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல வழக்கு,  நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், இந்த சம்பவம், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது. தற்பேது 51 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வாதிட்டார். 

Tap to resize

Latest Videos

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன.?

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், மக்களும், காவல் துறையிடம் புகார் அளித்தனர். எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து எத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் 2023ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் 14 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 16 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

ஏன் பாடம் கற்கவில்லை

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 பேரின் நிலைமை சீராக உள்ளதாகவும், மீதமுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்; மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  கடந்த 2023ம் ஆண்டு மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து, அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு வந்த பிறகு, கடந்த ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த சம்பவத்தின் மூலம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என நீதிபதிகள், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். 

அறிக்கை தாக்கல் செய்ய உத்தவு

கள்ளச்சாராயத்தை தடுக்க  மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுத்தது. அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷசாராய பலிகள் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


 

click me!