டி.டி.எப் வாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்!

By Manikanda PrabuFirst Published Nov 1, 2023, 11:42 AM IST
Highlights

டி.டி.எப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில், அவரது வலது கை முறிந்தது. மேலும், அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டி.டி.எப் வாசன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிடிஎப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மராத்தா இடஒதுக்கீடு: இன்று அனைத்து கட்சி கூட்டம்; இணையம், பேருந்து சேவை துண்டிப்பு!

முன்னதாக, , தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 05.10.2033 வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

click me!