
காதல் விவகாரத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அசோகன் மகள் பிரியங்கா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) விருத்தாசலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை உளுந்தூர்பேட்டையிலிருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வேலைக்குச் சென்றுள்ளார். விருத்தாசலம் பஸ்நிலையத்தில் இறங்கி நிறுவனத்துக்கு நடந்து சென்றபோது அவரின் பின்னால் பைக்கில் வந்த வாலிபர் திடீரென பிரியங்காவின் வாயை பொத்தி, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். உடனே பிரியங்கா கத்தியை தட்டிவிட்டு, வாலிபரின் பிடியிலிருந்து தப்பி, கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த நபர், வேகமாக பைக்கில் சென்று விட்டார்.
கழுத்தில் கத்திப்பட்டதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் கூறியதாவது, கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பிரியங்கா வேலை செய்து வந்தபோது, கொங்கராம்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரபாகரனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரியங்கா விருத்தாசலத்தில் உள்ள இந்த கம்பெனிக்கு வேலையில் சேர்ந்துள்ளார். அப்போதும் பிரபாகரன் கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் வந்து தினமும் பிரியங்காவிடம் பேச முயற்சி செய்துள்ளார். அவரிடம் பிரியங்கா பேசாமல் தொடர்ந்து வெறுப்பையே காட்டி வந்துள்ளார். இதனால் பிரியங்காவை கொலை செய்யும் நோக்கில் நேற்று வேலைக்குச்செல்லும் வழியில் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.
பிரியங்காவின் புத்தி சாலித்தனத்தால் காயத்துடன் தப்பியுள்ளார். என கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பிரபாகரனை தேடி வருகின்றனர்.