
திருவாரூர்
திருவாரூரில் உரிமையாளர் ஊரில் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் போலீஸிடம் சிக்காமல் இருக்க கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு சென்றனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜோன்ஸ் மரியம் 40). இவர் தனது வீட்டின் அருகே மருந்துக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி ஜோன்ஸ் மரியம் தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் பிரதாப், சிவா ஆகியோர், ஜோன்ஸ் மரியம் வீட்டில் உள்ள நாய்க்கு சாப்பாடு வைப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும், வீட்டின் முன் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது. உடனே இதுகுறித்து ஜோன்ஸ் மரியத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மதுரையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
அங்கு வந்து பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 26 சவரன் நகைகள், 3½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே குடவாசல் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஜோன்ஸ்மரியம் வெளியூர் சென்று விட்டதையும், அவரது வீடு பூட்டிக் கிடந்ததையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள்தான், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
மேலும், மர்ம நபர்கள் காவலாளர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வீட்டின் முன் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு சென்றதும் காவலாளர்களின் விசாணையில் தெரிய வந்தது.
கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜோன்ஸ்மரியம் கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.