திருப்பூரில் காதல் ஜோடிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் காதல் ஜோடிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் அருண்பாண்டி 25. திருப்பூர் பொன்முத்து நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். திருப்பூர் புதுார் பிரிவு, சுப்ரமணியம் நகரை சேர்ந்தவர் திவ்யா, 23, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் உறவினர்கள் என்பதாலும், அடிக்கடி சந்தித்து கொண்டதாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. பிறகு இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்கள். இந்த சூழ்நிலையில்தான் எதிர்பாராதவிதமாக அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென்று இறந்து விட்டார். அதனால் திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என இரண்டு வீட்டாரும் முடிவு செய்தனர். திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் காதல்ஜோடி மனவேதனை அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த அருண்பாண்டியன், திவ்யாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும், அருண்பாண்டியன் வீட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் திவ்யாவை தேடினர். திவ்யா, அருண்பாண்டி தங்கி உள்ள வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு அவர் தங்கியிருந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர்கள் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு திவ்யாவும், அருண்பாண்டியும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.