மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு எதிர்காலமே இருக்காது - ஒரே போடாக போட்ட எம்.பி...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 3, 2018, 11:31 AM IST
Highlights

மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. திருப்பூரில் நடந்த மாற்றுத் திறனாளிகள் மாநில மாநாட்டில் பேசினார்.
 

திருப்பூர்

மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. திருப்பூரில் நடந்த மாற்றுத் திறனாளிகள் மாநில மாநாட்டில் பேசினார்.

தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுத் தொடங்கியது. 

இதில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைத் தந்திருந்த மாற்றுத் திறனாளிகளின் 'பேரணி; நடைப்பெற்றது. இப்பேரணியின்போது, "வேலை வாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்;

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இந்தப் பேரணி யூனிவர்செல் திரையரங்கச் சாலையில் தொடங்கி குமரன் சாலை வழியாக நகர அரங்கில் சென்று முடிந்தது. 

பின்னர் நகர அரங்கில் பொதுகூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேஸ் வரவேற்றுப் பேசினார். 

இதில், நிர்வாகிகள் பகத்சிங், திருப்பதி, செல்வகுமார், பைசாஅகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., சங்கத்தின் அகிலஇந்தியச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசியது: "இந்திய நாட்டின் கல்வி, வர்த்தகம் என அனைத்தையும் கடும் சரிவில் தள்ளிவிட்டுள்ளது மத்திய அரசு. 

பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றிக்குப் பின்னர் ரூ.1500 கோடி ஏற்றுமதி முடங்கி உள்ளது. திருப்பூரில் வேலை பார்த்துவந்த பல வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். 

'நீட்' தேர்விலும் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதில்லை. அதிகார வர்த்தகத்தால்தான் 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு' நடத்தப்பட்டது. தமிழக அரசு பினாமி அரசாக இருக்கிறது. 

மக்கள் ஏற்றுக்கொண்டதை மட்டுமல்லாமல் மக்கள் ஏற்றுக்கொள்ளாத வரி விதிப்புகளையும் பா.ஜ.க. அரசு திணித்து உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டு உள்ளது. 

எந்த பொருளாதார வல்லுனர்கள், வங்கி உயரதிகாரிகள் போன்றவர்களிடம் கலந்தாலோசிக்காமல் பணமதிப்பி இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரு முதலாளிகளுக்கு மட்டுமே இதனால் ஆதயம் ஏற்பட்டுள்ளது. 

ரூ.1 இலட்சம் கோடியை நோக்கிப் பயணித்த திருப்பூர் வர்த்தகம் தற்போது கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது" என்று அவர் கூறினார்.

click me!