மெரீனாவில் தொலைந்து, ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்ட நாய் கண்டுபிடிப்பு... விரைவில் ஜெர்மன் தம்பதியிடம் ஒப்படைப்பு!

First Published Oct 22, 2017, 8:04 PM IST
Highlights
Lost in Marina Rs 50 thousand prized dog innovation


ஜெர்மனைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த ஜூலை மாதம் சென்னை மெரீனாவில் தொைலத்த கருப்பு நிற லேப்ரடார் வகை நாய் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாயைக் கண்டுபடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜெர்மனியைச் சேர்ந்த தம்பதி ஜானின் ஸ்காரன்பெர்க், ஸ்டீபன் காரெக். இவர்கள் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து உலகப் பயணம் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்கள் “லூக்” என்ற பெயருடைய கருப்பு நிற லேப்ரடார் நாயை உடன் அழைத்து வந்தனர். 

கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி சென்னைக்கு வந்திருந்தபோது, மெரீனா கடற்கரையில் நாயை காரில் அடைத்துவிட்டு வந்தனர். அப்போது யாரோ சிலர் காரின் கதவை திறந்து, நாயை அவிழ்த்துவிட்டனர். இதில் நாய் காணாமல் போனது.

இந்த நாயைத் தேடி ஜானின் ஸ்காரன்பெர்க், ஸ்டீபன் காரெக் ஆகியோர் சென்னையின் பல இடங்களில் அலைந்தனர். புளூகிராஸ் அமைப்பினர், விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் உதவியுடன் ஆட்டோ நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், நாய் பயிற்சியாளர்கள், நாய் விற்கும் இடங்கள் என ஏராளமான இடங்களுக்கு சென்று தேடியும் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக , தன்னுடைய “லூக்” நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு என்று ஜெர்மன் தம்பதி அறிவித்தனர். இந்த போஸ்டர் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது. ஆனால், அதற்கும் பலன் இல்லை.

 இதையடுத்து, மெரினா கடற்கரை போலீ்ஸ் நிலையத்தில் நாய் காணாமல் போனது குறித்து புகார் தெரிவித்துவிட்டு, ஜெர்மன் தம்பதி தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில், நாயைத் தேடும் பொறுப்பு விலங்குகள் நல ஆர்வலர் விஜயா நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஏறக்குறைய 100 நாட்களுக்குபின் “லூக்” நாயை விஜயா கண்டுபிடித்துள்ளார். அது குறித்து ஜெர்மன் தம்பதியினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

நாய் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விஜயா நாராயணன் கூறியதாவது-

ஜெர்மன் தம்பதியின் “லூக்” நாயை காணாமல் போனதுக்கு பின், அதை கண்டுபடிக்க ஏராளமான முயற்சிகள் எடுத்தோம். தனியாக வாட்ஸ்அப்பில் ஒரு பிரசாரமே நடத்தினோம். தமிழ் ஆங்கில நாளேடுகளில்  வாரம் ஒருமுறை விளம்பரம் செய்தோம். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை அச்சிட்டு சென்னை முழுவதும் வழங்கினோம். நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசும் அறிவித்தோம்.

இதைப் பார்த்தபின் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், அங்கு போய் பார்த்தபோது நாய் இல்லை. கால்நடை மருத்துவமனைகள், ஆட்டோ நிலையங்கள், நாய் பயிற்சியாளர்கள், நாய் விற்பவர்கள் என நாங்கள் தேடாத இடம் இல்லை. இந்நிலையில், 21-ந்தேதி எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய இருவர் நாங்கள் “லூக்” நாயை ஒரு கால்நடை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சிறுவனிடம் இந்த நாய் மெரீனா கடற்கரையில் இருந்தது. அவனிடம் பேசி, சமாதானம் செய்து இந்த நாயை பெற்றோம். இப்போது நாய் கால்நடை மருத்துவமனையில் இருக்கிறது என்றனர். இதையடுத்து திருவான்மியூரில் உள்ள அந்த கால்நடை மருத்துவமனைக்கு சென்று நாயை ஆய்வு செய்தோம்.

அதில் நாயின் அடையாளங்களான வயிற்றுப்பகுதி, கால்பகுதியில் வெள்ளை நிறம் இருப்பது, நாயின் கழுத்தில் போடப்பட்டுள்ள பட்டையில் பொருத்தப்பட்டுள்ள “மைக்ரோ சிப்” என அனைத்தும் சரியாக இருந்தது. ஏறக்குறைய 100 நாட்களுக்குபின் “லூக்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெர்மன் தம்பதிகள் ஜானின் ஸ்காரன்பெர்க், ஸ்டீபன் காரெக் ஆகிய இருவரும் நேபாளத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு லூக் கிடைத்துவிட்டான் என்ற நற்செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த சில நாட்களில் சென்னைக்கு வர இருக்கின்றனர். அவர்களிடம் இந்த நாய் ஒப்படைக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!