
நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனபிரியா (34). இந்த தம்பதிக்கு பிரணிதா (6) என்ற மகளும், பிரணித்(2) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், வழக்கமாக காலையில் எழுந்து கொள்ளும் பிரேம்ராஜின் வீட்டில் இருந்து மதியம் வரை யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் மோகனபிரியா, குழந்தைகள் அசைவின்றிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மூன்று பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வாக்குப்பதிவு செய்த அவரது வீட்டை சோதனை செய்த போது பிரேம்ராஜ் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் ஆன்லைன் ஆப்பில் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கடனை எப்படி கட்டுவது என தெரிய வில்லை. எங்களை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார்.
பிரேம்ராஜின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவன் மாயமான நிலையில், குழந்தைகளை கொலை செய்துவிட்டு மோகனபிரியா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனாலும், பிரேம்ராஜ் பிடித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.