லாரி மோதியதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே பலி; மோட்டார் சைக்கிள் வெடித்து லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு...

First Published Mar 21, 2018, 8:54 AM IST
Highlights
Lorry hits and kills youth Motorbike exploding lorry fire


திருச்சி

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மோதிய லாரி, மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டு சென்றதால் டேங்க் வெடித்து லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos

கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள காகித தொழிற்சாலையில் இருந்து நிலக்கரி துகள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை அரியலூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை பரமத்திவேலூர் மாணிக்கநத்தத்தை சேர்ந்த திருப்பதி (47) என்பவர் ஓட்டினார். 

அந்த லாரி திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் துடையூர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிரே திருச்சியில் இருந்து இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் தர்மபுரி மாவட்டம், முத்தாம்பட்டி தாலுகா, மங்களகோட்டை கிராமத்தை சேர்ந்த பழனி மகன் சபரி என்கிற அனுமந்தன் (26). 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலக்கொட்டம் கிராமத்தில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். 

அனுமந்தன் மீது லாரி படுவேகமாக மோதியதில் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் முன்பக்கம் சிக்கியதில் சக்கரம் ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும், லாரி நிற்காமல் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. 

இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை காவலாளர்கள் மற்றும் திருவரங்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த இளைஞரின் உடலை காவலாளர்கள் மீட்டு உடற்கூராய்வுக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தீயணைப்புத் துறையினர் லாரியில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  
 

click me!