முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் குறைந்ததால் தேங்கி நிற்கும் கழிவுநீர் - நோய்கள் ஏற்படும் அபாயத்தில் மக்கள்...

First Published Mar 21, 2018, 8:19 AM IST
Highlights
Waste water logged in Mullai Periyar - Diseases spred ...


தேனி

முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால் உறைகிணறுகளில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் வயிற்றுப்போக்கு. மஞ்சள்காமலை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் குளோரின் கலந்து குடிநீர் விநியோகிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு உள்ளதால் ஆற்றுப்பகுதியில் உறை கிணறுகள் அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் அருகே முல்லைப்பெரியாற்றில் உறை கிணறுகள் அமைத்து உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 13 ஊராட்சிகளுக்கும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பருவமழை பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கன அடியாக குறைந்துவிட்டது. இதனால் உறை கிணறுகள் அமைக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

"முல்லைப்பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கும்போது ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அடித்துச் செல்லப்பட்டுவிடும். தற்போது தண்ணீர் குறைந்ததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. 

இந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும்போது தேவையான அளவு குளோரின் கலந்து மக்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு. மஞ்சள்காமலை, உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம், உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் உள்ளாட்சி அமைப்புகள் குளோரினேசன் செய்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

click me!