
திருச்சி
போதை தலைக்கேறும் அளவிற்கு குடித்திவிட்டு லாரியை ஓட்டிவந்ததால் பாலத்தின் தடுப்புச் சுவரில் லாரி மோதி அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது. இதில், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன பரிசோதனைக்காக மண்ணச்சநல்லூர் பகுதியில் இருந்து ஒரு லாரி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
லாரியை மண்ணச்சநல்லூர் புதுச்செட்டி தெருவைச் சேர்ந்த சாதாசிவம் (53) ஓட்டி வந்தார். நெடுஞ்சாலை 1 டோல்கேட் அருகே லாரி வந்தபோது, சட்டென்று தாறுமாறாக ஓடியது. பின்னர், லாரி மேம்பாலத்தின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது.
லாரி மோதியதில் தடுப்பு சுவர் இடிந்து பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள லால்குடி செல்லும் சாலையில் விழுந்தது. அப்போது, சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த தாளக்குடியை அடுத்துள்ள அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி (65) மீது தடுப்பு சுவர் கற்கள் விழுந்தத்இல் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அவசரஊர்தி மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்த ஓட்டுநர் சாதாசிவம் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டதால் அவரை சுற்றியிருந்த மக்கள் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் நெடுஞ்சாலை 1 டோல்கேட் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து, மீட்பு வாகனம் மூலம் லாரியை மீட்டனர்.
பின்னர், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து மேற்கொண்ட. விசாரணையில் ஓட்டுநர் சாதாசிவம் குடித்துவிட்டு ஓட்டியதில் போதை தலைக்கேறியதில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டுநர் சதாசிவத்தை காவலாளர்கள் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.