
வேலூர்
வேலூரில் லாரி மோதியதில் மொபட் பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் மீது லாரி ஏறியது. இதில் கணவன் கண்முன்னே அப்பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, செங்குட்டை சி.எம்.ஜான் தெருவைச் சேர்ந்தவர் இராமலிங்கம். இவர் வீடு வீடாக குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தரணி. இத்தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
நேற்று காலை இராமலிங்கம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மொபட் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோ போடுவதற்காக மொபட் பைக்கை திருப்பினார்.
அப்போது மொபட் பைக்குக்கு பின்னால் சிமெண்ட் ஏற்றிக் கொண்டுவந்த லாரியும், டீசல் போடுவதற்காக பெட்ரோ பங்குக்குள் திரும்பியது. அப்போது மொபட் பைக்கின் மீது லாரி மோதியது. இதில், இராமலிங்கம் மற்றும் குழந்தை சாலையில் இடது பக்கத்தில் விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தரணி சாலையின் வலதுபுறத்தில் விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் தரணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனை கணவர் பார்த்து கதறி அழுதார். கண் முன்னே மனைவி தலை நசுங்கி இறந்ததை பார்த்த கணவர் அதிர்ச்சியில் உறைந்தார். தாயைப் பார்த்து இரண்டு வயது குழந்தை கதறி அழுதது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவலாளர்கள் தரனியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.