
காட்பாடி, ஒடைபிள்ளையார் கோவில் அருகே சாலை விபத்தில் சந்தோஷ் (25) என்ற வாலிபர் லாரி ஏறி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, ஒடைப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உள்ளனர்.
இதனால் அந்த பகுதி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சாலை ஆக்கிரமிப்பு பணிக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒடைப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள சாலையில் சந்தோஷ் என்பவர் மீது லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனைக் கேள்விப்பட்ட வாலிபரின் உறவினர்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை ஆக்கிரமிப்பு பணிகளை விரைவில் முடிக்காமல் தாமதம் செய்வதாலேயே இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலுசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.