
வாரக்கணக்கில் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாமல் தவித்தவந்த மக்கள், ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன. வைகை ஆறில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வார்டிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன்மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இச்சூழ்நிலையில் 14–வது வார்டு கீழப்புதுத்தெரு பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. மேலும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பறையும் செயல்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சினம் கொண்ட அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று திரளாக கூடினர். அலுவலகத்தின் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “14–வது வார்டுக்கு இனிவரும் காலங்களில் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டு, கலைந்துச் சென்றனர்.