நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை பரந்தூர், வேங்கைவயல் மக்கள் புறக்கணித்துள்ளனர்
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி, 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை தமிழ்நாட்டின் பரந்தூர், வேங்கைவயல் மக்கள் புறக்கணித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் மொத்தம் 1375 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு இரண்டு வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக 21 நபர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதேபோல் நாகபட்டு கிராமத்தில் 280 வாக்குகள் உள்ள நிலையில், அங்கு சுமார் 40 வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 630 நாட்களுக்கு மேலாக போராடியும் தீர்வு இல்லை என்பதால் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்: இவிஎம் இயந்திரங்களுக்கு தீ வைப்பு!
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, அவர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கைவயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.