நாளை எலக்சன் ரிசல்ட்! பாஜக முகவர் என்ன செய்ய வேண்டும்? லிஸ்ட் போட்டு அலர்ட் செய்யும் அண்ணாமலை!

By vinoth kumar  |  First Published Jun 3, 2024, 7:41 AM IST

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, தபால் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள், முழு கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.


நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் பாஜக முகவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேர்தல் வாக்குப் பதிவு முகவர்கள் பணி எத்தனை முக்கியமோ, அதை விட ஒரு படி மேலானது, வாக்கு எண்ணிக்கை முகவர் பணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேர்தல் பணிகளின்போது மேற்கொண்ட கடின உழைப்பின் பலன்களை உறுதி செய்யும் பொறுப்பான பணி, வாக்கு எண்ணிக்கை முகவர் பணி. எனவே, இந்த சிறப்பான கடமையை மேற்கொள்ளவிருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

Latest Videos

இதையும் படிங்க: மீண்டும் மோடி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவு பெரும் மகிழ்ச்சி.! இன்னும் அதிக இடங்களை பிடிப்போம்-தமிழிசை

வாக்குப் பதிவு எந்திரத்தில், வாக்குகளைப் பதிவு செய்யும் பொத்தான்கள் அடங்கிய Ballot பகுதி எப்படிச் செயல்படும். கன்ட்ரோல் யூனிட் (CU) என்று அழைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை பதிவாகியிருக்கும் பகுதி எப்படிச் செயல்படும், VVPAT என்ற, வாக்குகளை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு என, இவை அனைத்தையும் குறித்த அடிப்படையான விவரங்களை, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தின் Ballot பகுதி, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கன்ட்ரோல் யூனிட் பகுதியும், VVPAT ஒப்புகைச் சீட்டு பகுதியும்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கொண்டு வரப்படும்.

ஒவ்வொரு கன்ட்ரோல் யூனிட் எந்திரத்திலும் பதிவாகியுள்ள, வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிய இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகலாம். ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது மூன்று சுற்றுகளின் முடிவுகள் வெளியாகலாம். இவை அனைத்தும் சரியான வகையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பு, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, தபால் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள், முழு கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக, நமது முகவர்கள், கன்ட்ரோல் யூனிட்டில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணும், வாக்குப் பதிவின்போது அந்த எந்திரத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த எண்ணும் ஒன்றுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள முத்திரை, நமது கண்முன்னே தான் திறக்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு எந்திரத்திலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, வாக்குப் பதிவு தினத்தன்று வழங்கப்பட்ட 17C படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையோடு ஒத்துப்போகிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். படிவம் 17C மற்றும் படிவம் 20 இரண்டிலும், வாக்குகள் எண்ணிக்கை ஒத்துப் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், படிவம் 20 குறிப்பிடப்படும் வாக்குகள் கூட்டப்படும்போது, எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, படிவம் 20ல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகாமில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு எந்திரத்தின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்போதும், முகவர்கள் அந்த எண்ணிக்கையைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொத்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும், 5 வாக்குப் பதிவு மையங்களைத் தேர்ந்தெடுத்து, VVPAT எனப்படும் ஒப்புகைச் சீட்டுடன், பதிவான வாக்குகளைச் சரிபார்க்கும் பணி நடைபெறும். அதில் ஏதேனும் தவறாக இருந்தால், தலைமை முகவர் வழியாக, மைய தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். வாக்குப்பதிவு எந்திரத்தையும், விவிபேட் எந்திரத்தையும் சரிபார்த்து, எண்ணிக்கையில் குளறுபடி இருப்பது நிரூபிக்கப்பட்டால், குறிப்பிட்ட எந்திரத்தின் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்படும் எனவே அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  மீண்டும் மோடி தான் வருவார்னு எனக்கு முன்பே தெரியுமே.!! எனது கட்டுப்பாட்டில் அதிமுகவா.? டிடிவி தினகரன் அதிரடி

மேலும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, குறித்த நேரத்துக்கு முன்பாகவே நமது முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்வது முக்கியம். வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில்தான் திறக்கப்படும். குறிப்பெடுக்கத் தேவையான பென்சில், பேனா, வெள்ளைக் காகிதம் உள்ளிட்டவற்றை நாம் தயாராக வைத்திருப்பது சிறப்பு. நமது வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு மிகுந்த வாக்கு எண்ணிக்கை முகவராகச் செயல்படவிருக்கும் உங்கள் அனைவரின் பணியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!