மக்களவைத் தேர்தலில் திமுகவில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதுஒருபுறமிருக்க, எம்.பி. தேர்தலில் சீட் கேட்டு பலரும் முட்டி மோதி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகள். இதில், கடந்த 2019 தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி தவிர தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடியது. இந்த முறை தமிழ்நாட்டில் 39 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளாதால், எப்படியாவது எம்.பி. சீட் வாங்கி விட வேண்டும் என சிட்டிங் எம்.பி.க்களும், கட்சியின் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை பலரும் தங்களுக்கு தெரிந்த சேனல்கள் வழியாக காய் நகர்த்தி வருகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக மட்டும் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. எஞ்சிய 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இம்முறை கூடுதலாக ஐந்து தொகுதிகள் சேர்த்து 25 தொகுதிகளில் திமுக களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுகவில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தலில் சிட்டிங் எம்.பி.க்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு எப்படி உள்ளது? சிட்டிங் எம்.பிக்கள் இல்லாமல் தொகுதியில் வேறு யாருக்கு செல்வாக்கு உள்ளது? என்பது குறித்தி திமுக தலைமை ரகசிய சர்வே நடத்தியதாக கூறப்படுகிறது. அதனடிப்படையிலேயே சீட் வழங்கப்படும் என்கிறார்கள்.
அதன்படி, நெல்லை தொகுதியில் ஞானதிரவியத்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட மாட்டது. பூங்கோதை ஆலடி அருணா அல்லது கிராகம்பெல் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் என்கிறார்கள். இதில், பூங்கோதைக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் பூங்கோதை அமைச்சராக இருந்தபோதும், எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளடி வேலைகளால் தோல்வியைத் தழுவினார். இது மேலிடத்துக்கும் தெரியும். அவர் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் ஆகியிருப்பார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. எனவே, பூங்கோதைக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
தூத்துக்குடியில் கண்டிப்பாக கனிமொழிக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். தூத்துக்குடியை குறி வைத்தே அவர் பல்வேறு பணிகளை செய்தும் வருகிறார். பெரும்பாலும் தொகுதியிலேயேதான் அவர் இருக்கிறார் என்கிறார்கள். அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
தேனி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது. ஆனால், அந்த தொகுதியில் மட்டுமே திமுக கூட்டணி தோல்வியை தழுவியது. எனவே, இந்த முறை தேனியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சியினர் கோரியுள்ளனர். அப்படி ஒதுக்கும் பட்சத்தில் தங்க தமிழ்ச்செல்வன் அல்லது பொன்.முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதில், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்து அமமுக சென்று அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு திமுக வாய்ப்பளித்தது. ஆனால், தோல்வியை தழுவினார். அடுத்து மாநிலங்களவை சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் டி.ஆர்.பாலுவுக்கே வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஆ.ராசா நீலகிரி இல்லாமல், வேறு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், நீலகிரி தொகுதியை குறி வைத்து வேலை பார்த்த, பாஜகவின் எல்.முருகன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகவுள்ளதால், ராசாவுக்கு ரூட் க்ளியர் என்கிறார்கள்.
திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக சர்வே முடிவுகள் திமுக தலைமைக்கு கூறியுள்ளன. இந்த தொகுதியில், தனது மகன் எ.வ.வே.கம்பனுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேட்டு வருகிறார். அதற்கான கிரவுண்ட் ஒர்க்கையும் சத்தமின்றி அவர் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினுடன் எ.வ.வேலுவுக்கு இருக்கும் நெருக்கத்தினால், அவரது மகனுக்கு கட்சித் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிடும் என தெரிகிறது.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி!
பெரம்பலூர் தொகுதியை கடந்த முறை ஐஜேகே கட்சியின் தலைவர் பச்சைமுத்துவுக்கு திமுக ஒதுக்கியது. ஆனால், அவர் இப்போது பாஜக கூட்டணிக்கு தாவி விட்டார். எனவே, திமுகதான் அந்த தொகுதியில் போட்டியிடும் என தெரிகிறது. பெரம்பலூர் தொகுதியை அமைச்சர் கே.என்.நேரு தனது மகன் அருணுக்காக கேட்டு வருகிறார். திருநாவுக்கரசருக்கு இல்லையென்றாலும் கூட, திருச்சி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதால், பெரம்பலூர் தொகுதியை தனது மகனுக்காக அவர் கேட்டு வருவதாக தெரிகிறது. ஒருவேளை ஆ.ராசா மீண்டும் பெரம்பலூர் தொகுதியை கேட்கவும் வாய்ப்புள்ளது.
பெரம்பலூர் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியவர்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், திமுக தோற்கும் நிலையில் இருந்தால் முத்தரையர் சமுதாதயத்தை நிற்க வைப்பதாகவும், வெற்றி பெற வாய்ப்பிருந்தால் ரெட்டியார், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர் எனவும் முத்தரையர் சமூகத்தில் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. எனவே, பெரம்பலூர் தொகுதி முத்தரையருக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அதேபோல், கள்ளக்குறுச்சியில் மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. இவருக்கு முதலில் வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், பொன்முடி வழக்குகளை எதிர்கொண்டு அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளதால், அவரை சமாதானப்படுத்தும் வகையில், கவுதம சிகாமனிக்கே வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.
த்ரிஷாவுக்கு ஆதரவாக விஜய், கமல் ஏன் குரல் கொடுக்கவில்லை?
தர்மபுரி தொகுதி எம்பி செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என தலைமைக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திமுகவின் கொள்கைகளை களத்தில் தீவிரமாக பேசுபவர் என்பதால், அவரது பெயர் சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. வடசென்னை கலாநிதி வீராசாமி, தென் சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் மீதும் அதிருப்தி நிலவுவதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் போயுள்ளது. ஆனால், இவர்களது குடும்பம் கட்சித் தலைமைக்கு நெருக்கமானது என்பதால், கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது இறுதியில் தான் தெரியும். இதில், தென் சென்னையை கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அதேபோல், இந்த முறை வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இளைஞர் அணி மாநாட்டு மேடையிலேயே இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என திமுக தலைவரிடம் உதயநிதி கோரிக்கை வைத்தார். குறைந்தபட்சம் 5 இடங்களையாவது கேட்டு வாங்கும் முடிவில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக கூறுகிறார்கள். இளைஞரணியில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.