
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொது மக்களும், அரசியல் தலைவர்களும் , நடிகர் - நடிகைகளும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலுக்காக, 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே வாக்குவாதம் மோதல், ஏற்பட்டதன் காரணமாக ஆங்காங்கே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் பேரூராட்சிகளில் 61.38% வாக்குகளும், நாகராட்சிகளில் 53.49 % மற்றும் மாநகராட்சிகளில் 39.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 65.68% வாக்குகளும், நாமக்கல்லில் 64.19 % வாக்குகளும், கரூர் மாவட்டத்தில் 63.56% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதேசமயம் காலை முதலே சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்து வருகிறது. பிற்பகம் 3 மணி நிலவரப்படி சென்னையில் 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. காலை 9 மணிக்கு 3.96 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், 11 மணிக்கு 17.88 சதவீதமாக அதிகரித்தது. ஒரு மணி நிலவரப்படி 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்காமல் இருப்பது, மக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது.