
தனியார் திருமண மண்டபத்தில் கரூரை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து மக்களுக்கு ஹாட்பாக்ஸ், பணம் ஆகியவை வழங்கி வருவதாக கோவை மாநகராட்சியின் 63வது வார்டில் பாஜக வேட்பாளர் கவிதாராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சி பகுதிகளில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 7,621 வார்டுகளிலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிந்த நாள் முதல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கரூரை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து மக்களுக்கு ஹாட்பாக்ஸ், பணம் ஆகியவை வழங்கி வருவதாக 63வது வார்டில் பாஜக வேட்பாளர் கவிதாராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், காவல்நிலையம் அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் கரூரை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து மக்களுக்கு பணம், ஹாட்பாக்ஸ் ஆகியவையை விநியோகம் செய்து வருகின்றனர். அவர்களை உள்ளேயே வைத்து பூட்டிவைத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் ஜன்னல் வழியாக உள்ளே இருந்தவர்களை காடிய போது இடையே வந்த ஒரு நபர் தன்னை நல்ல வீடியோ எடுங்கள் என்றும் அவரது பெயரை கேட்கும் போது அதை நீங்களே கண்டுப்பிடித்துக் கொள்ளுங்கள் என திமிராக பேசிவிட்டு சென்றார். கோவையில் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கோவையில் வெளிப்படையாக திருமண மண்டபத்தில் வைத்து பொருட்களை விநியோகம் செய்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.