உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவினர் ஒற்றுமையுடன் சந்திக்க வேண்டும் - அமைச்சர் பெஞ்சமின் அறிவுரை...

First Published Feb 13, 2018, 6:05 AM IST
Highlights
Local body elections admk should be united - Minister Benjamin advice ...


திருவள்ளூர்

அதிமுகவினர் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.   

இந்தக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏ-வுமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் எஸ்.ஜீவாசுப்பிரமணி, பி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .  

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்து கொண்டு பேசியது: "அதிமுகவில் எளிய தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகுத்து தந்துள்ளார்.

அந்த வகையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்.

அதேபோல,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒவ்வொரு கிளையிலும் சிறப்பாக கொடியேற்றி கொண்டாட வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.சம்பத்குமார், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.மணிமாறன், மாநில சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜாவித் அகமத் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். வேப்பம்பட்டு ஊராட்சி செயலாளர் கோசலராமன் நன்றித் தெரிவித்தார்.

 

click me!