
தமிழக உள்ளாட்சி தேர்தல்,வரும் மே மாதம், 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.இதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டன.
ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை என்றும் அதனால் அதற்கான வழிகளை ஏற்பாடு செய்து விட்டு அதன் பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்தார்
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லத்தக்கது என்றும், ஆனால், தேர்தல் அறிவிப்பு, முறைப்படி இல்லை என்பதால், மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அதே நேரத்தில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி கிருபாகரனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.என்.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்ததுக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜரான மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர், மே மாதம், 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் என்று தேர்தல் நடத்தப்படும் என ‛உத்தேச தேதியை கூறாமல், சரியான தேதியை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு நாளை வழக்கை தள்ளி வைத்தனர்.