கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமானது உண்டு. பலர் தற்கொலை செய்கின்ற கொடுமையும் தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
தென் மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, தினவட்டி, ராக்கெட் வட்டி என பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமானது உண்டு. பலர் தற்கொலை செய்கின்ற கொடுமையும் தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதுமட்டுமன்றி, கடன் பெற்றவர்களை கந்துவட்டி கும்பல் கடத்தி துன்புறுத்துவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனை தடுக்கும் நோக்கில் அதிக வட்டி வசூல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003ம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பாற்றுவதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாதே காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ப்ளீஸ் நான் செய்தது தப்புதான்! இறங்கி வந்த கணவர்! மனம் இறங்காத மனைவி! வீடியோ காலை கட் செய்துவிட்டு தற்கொலை!
இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி பழனியம்மாள். இருவரும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தனர். இவர்களது மகள் ஆனந்தவல்லி (27). இவருக்கு திருமணமாகி 3 மாத பெண் குழந்தை சஷ்டிகா. இவர்களது மகன் ஆதித்யா(14). இவர்கள் 5 பேரும் கடந்த மே மாதம் 23-ம் தேதி பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 நபர்களிடம் லட்சக்கணக்கில் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், இந்த கடனை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்தும், மிரட்டியும் வந்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர்.
கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, மிரட்டலால் தான் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்து இருந்தார். அப்பொழுதே லிங்கம் குறிப்பிட்டிருந்த நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் ஐந்து பேர் உயிரை காப்பாற்றி இருக்க முடியும். 5 பேர் தற்கொலை செய்து கொண்ட பிறகு கந்து வட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் கடந்த 6-ம் தேதி சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51). அச்சக தொழிலாளியான இவரது மனைவி ஞானபிரகாசி (48) பட்டாசுக்கான காகித குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியரின் மகள் ஷர்மிளா( 24) எம்.ஏ முதுகலை பட்டம் பெற்ற நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணத்திற்கு பூ வைத்துள்ளனர். மகன் ஜெயசூர்யா (23) பொறியியல் பட்டப்படிப்பு படித்து ஓசூரில் பணிபுரிந்து வருகிறார்.
கூலி தொழிலாளிகளான ஜெயச்சந்திரன்- ஞானபிரகாசி தம்பதியினர் தங்களின் மகள் மற்றும் மகனின் கல்விச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதி கிராமத்திலுள்ள சிலரிடம் ரூபாய் 4 லட்சம் வரை கடன் தொகை வட்டிக்கு பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தாங்கள் பெற்ற கடனுடன் அதிகமான வட்டித் தொகையை கட்ட முடியாமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர். ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் கந்து வட்டி கொடுத்தவர்கள் தகாத முறையில் திட்டியும் வேறு எந்த தொழிலாவது செய்து (விபச்சாரம் செய்தாவது) பணத்தைக் கொடுக்குமாறு தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி, தனது மகள் சர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: கூலிப்படை தலைவனும் பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்! நடந்தது என்ன?
தற்கொலைக்கு காரணமான மூன்று பேரையும் போலீஸ் கைது செய்தது. அதே பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு வாரத்திற்கு முன்பு குமார் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது மட்டுமல்லாமல் பல சம்பவங்கள் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மதுரை போன்ற தென்மாவட்டங்களில் கந்து கொடுமைகள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கந்து வட்டி கொடுமைக்காக நாளுக்கு நாள் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் சாதாரண மக்கள் கந்துவட்டி பிடியில் சிக்கி நாளுக்கு நாள் பிஞ்சு குழந்தைகளோடு உயிரை மாய்த்துக்கொள்ளும் கொடூரம் தடுக்க முடியாத நிலை உருவாகும்.