
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் மின்னல் தாக்கி ஐடிஐ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மற்றும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மாலையில் திடீரென இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், மாணவர்கள் இரண்டு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
சென்னை, அனாகாபுத்தூர், கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (19). இவர் தனது நண்பர் கிஷோருடன், நேற்று இரவு மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மின்னல் தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, அருகில் இருந்தோர் அவர்கள் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
லோகேஷ் மற்றும் கிஷோரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, பல்லாவரம் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.