
திருப்பூர் அடகு கடையில் செல்வம் என்பவரை கொலை செய்து விட்டு 348 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற நண்பருக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து திருப்பூர் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் இடையபட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லழகு. இவர் திருப்பூர் வலையன்காடு பகுதியில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் ரூ.55 லட்சம் மதிப்பிலான 348 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அடகுக்கடையில் வேலை செய்து வந்த நல்லழகுவின் தம்பி செல்வமும் கொலை செய்யபட்டார்.
இந்த கொலை மற்றும் கொள்ளை குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலையான செல்வத்தின் நண்பர் பிரபு மற்றும் பிரபுவின் கூட்டாளி நரேன் ஆகியோர் கொலையாளிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து திருப்பூர் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் பிரபு என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.