தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

By SG Balan  |  First Published Apr 11, 2024, 12:25 AM IST

அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் என்றும் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டுவிட்டன என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பொள்ளாச்சி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tap to resize

Latest Videos

பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"அ.தி.மு.க. பிரிந்து இருக்கிறது என்று கூறுகிற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொள்ளாச்சி கூட்டத்தில் வந்து பாருங்கள். அ.தி.மு.க.வை உடைக்க நினைத்த உங்களின் கனவு தூள்தூளாக உடைக்கப்பட்டது.

பொள்ளாச்சியில் இன்று நடைபெறுவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அகிய இரு தலைவர்களும் தமிழக மக்களுக்காக இறைவன் கொடுத்த கொடை ஆவர். அவர்கள் இருவரும் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அவர்கள் அ.தி.மு.க.வை கட்டிக் காத்து நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். நாம் தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.

தமிழகத்தை 30 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வருவதற்கு அ.தி.மு.க. அரசு பாடுபட்டது.3 ஆண்டுகள் தி.மு.க அரசு செய்த சாதனைகளை பேச தயாரா?. தி.மு.க என்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் நிறுவனம்.

குடும்ப அரசியல் நடத்தி வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என தி.மு.க வில் வாரிசு அரசியல் நடக்கிறது.மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள், அதனால் என்ன பயன்? மத்தியில் இருந்து வருபவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டங்களை கொடுத்தார்களா?

ஏரோ பிளேனில் வந்து இறங்குகிறார்கள், சாலையில் அப்படியே போகிறார்கள், இதற்காக மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? ஏதேதோ பேசி மக்களை குழப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

click me!