சல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம்; செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிய இருவர் மிரட்டல்…

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம்; செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிய இருவர் மிரட்டல்…

சுருக்கம்

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக 300 அடி செல்போன் கோபுரத்தில் ஏறிய இருவர் சல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

தமிழர்கள் வீரத்தின் அடையாளமான சல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் உள்ள சுமார் 300 அடி உயர செல்போன் கோபுரத்தில், கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் காளை பாண்டியன் (25), முருகன் மகன் சூர்யா (18) ஆகிய இருவரும் ஏறியுள்ளனர்.

காளை பாண்டியன் சமையல் மாஸ்டராக உள்ளார். சூர்யா டுட்டோரியலில் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்.

அவர்கள் இருவரும் செல்போன் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி, “சல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம்” என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல், கிழக்கு காவல் ஆய்வாளர் பவுல்ராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி வீர இலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் அருகில் வலை விரித்தவாறு தயார் நிலையில் காத்திருந்தனர்.

செல்போன் கோபுரத்தில் இருந்தவர்களிடம் காவலாளர்கள் ஒலிப்பெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாகலாபுரம் மனோ கல்லூரி பேராசிரியர் சம்பத்குமார், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டியன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் இருவரும் கீழே இறங்க மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், இருவரும் கீழே இறங்க மறுத்தனர். காலை 10.30 மணியளவில் கிழக்கு காவல் ஆய்வாளர் பவுல்ராஜ் ஒலிப்பெருக்கி கருவி மூலம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தால், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

அந்த உறுதியைத் தொடர்ந்து காலை 10.40 மணியளவில் செல்போன் கோபுரத்தில் இருந்து காளை பாண்டியன், சூர்யா ஆகிய இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

பின்னர் அவர்களுக்கு காவலாளர்கள் அறிவுரைகள் வழங்கி, பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி