சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக இருப்பதால் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கூட பிற மாவட்ட மருத்துவமனைகளை தேடி ஓடுகின்றனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக இருப்பதால் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கூட பிற மாவட்ட மருத்துவமனைகளை தேடி ஓடுகின்றனர். எனவே, இம்மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது சிங்கம்புணரி. 'தொழில் நகரம்' என்றழைக்கப்படும் இந்த ஊரில் அரிசி ஆலை, இரும்புப் பட்டறைகள், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை என்று பல தொழில்கள் ஜோராக நடைபெறுகின்றன.
சிங்கம்புணரி நகரில் குடியிருப்புகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு போன வருடம் சிங்கம்புணரி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு சிறப்பைப் பெற்றது.
கடந்த 1970–ஆம் ஆண்டு சிங்கம்புணரி நகரில் அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் சிங்கம்புணரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எட்டு வருடங்களுக்கு முன்பு அதாவது 2010-ல் இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் வசதிக்காக கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது இம்மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனர். சுமார் ஐநூறு பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்துச் செல்கின்றனர்.
அதுமட்டுமல்ல இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மட்டும் சராசரியாக 50 பிரசவங்கள் நடக்கின்றன. இதேபோல மாதத்தில் 30-லிருந்து 40 வரை அறுவைச் சிகிச்சை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் மருத்துவமனையில் கடந்த சில வருடங்களாக மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரசவம் பார்க்க பெண் மருத்துவர்கள் இல்லை. இதனால் கர்ப்பிணிகள் அவதி அடைகின்றனர். பிற சிகிச்சைகளை அளிக்கவும் ஓருசில மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையைத் தேடி ஓடுகின்றனர்.
ஒருபக்கம் மருத்துவர்கள் பற்றாக்குறை என்றால் மறுபக்கம் மாத்திரைகள் வழங்கும் ஊழியர்கள், செவிலியர்கள் கூட குறைவாகவே உள்ளனர். எனவே, சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.