Mayiladuthurai Leopard : மயிலாடுதுறை மாவட்டத்தில் நகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டு வந்தது.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது அடுத்து மக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கினர். இதனை அடுத்து சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் களம் இறங்கிய நிலையில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக வனத்துறையின் பார்வையில் சிக்காமல் நீர் நிலைகளை பயன்படுத்தி அந்த சிறுத்தை தொடர்ந்து தப்பித்து சென்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறுத்தையை கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அந்த சிறுத்தை தென்பட்டது. அதில் சிறுத்தையின் முகம் மிகவும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனை அடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் சிறுத்தை காணப்பட்ட அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.
என்ன ஒரு மனசு.. 3 மாத குட்டியானைக்கு உணவளித்து 5 மணிநேரம் போராடி தாயுடன் சேர்த்த வனத்துறையினர்.!
இந்த சூழ்நிலையில் வனத்துறையினர் ஒரு புதிய முயற்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில் நிலையம் உள்ளிட்ட ஆறு இடங்களில் 7 விசேஷ கூண்டுகளை அமைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை வனத்துறையினரிடம் இருந்து தப்பிக்க ஆறுகள் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மயிலாடுதுறையில் உள்ள மஞ்சள் ஆறு மற்றும் பழைய காவிரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தானியங்கி கேமராக்கள் தற்பொழுது வரவழைக்கப்பட்டு அவை சரியான இடங்களில் பொருத்தப்பட்ட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது .
மக்களிடம் கிடைக்கும் தகவலை வைத்தும் சிறுத்தையை தொடர்ச்சியாக வனத்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே சிறுத்தையின் எச்சங்களும் கிடைத்துள்ளது, அதை வைத்து வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் சிறுத்தை கும்பகோணம் பகுதியில் சுற்றித்திரிவதாக வதந்திகளை பரப்பிய சிலரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.