செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.
"ஆளுநர் வேண்டுமென்றே மோதலை உருவாக்குகிறார். அரசியலமைப்பை தூக்கி எறிந்துவிட்டு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொள்கிறார். அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆன்.என்.ரவி அதிரடி உத்தரவு
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போல உள்ளது; அவருக்கு என்ன ஆனது என்று பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா? அவரது தான்தோன்றித்தனமான போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கூறுகையில், "ஒரு அமைச்சரை மாற்றவோ, நீக்கவோ முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவமதித்து, தானே ஒரு சூப்பர் முதல்வராக நடந்துகொள்ள ஆளுநர் முற்பட்டால், அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரானதாகத்தான் நீதிமன்றமும் பார்க்கும்" என்று கூறியுள்ளார்.
"செந்தில் பாலாஜியை நீக்கியது சட்டவிரோதமானது மட்டுமல்ல; ஆளுநரின் அதிகார வரம்பை மீறிய செயல்; ஆளுநர் நீக்கியதை நீதிமன்றம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று கூறியுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். ஆளுநர் தனது கடமையை உணர்ந்து நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்