சட்டக்கல்லூரி மாணவன் கொடூர தாக்குதல்.. விடிய விடிய வைத்து அடித்ததாக புகார்..போலீஸ் மீது பாய்ந்தது வழக்கு..

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 2:56 PM IST
Highlights


சட்டக்கல்லூரி மாணவனை தாக்கியதாக 9 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள  சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார்.  இவர் கடந்த 15 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் பணி முடிந்துவீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீஇமிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு ரஹீம் தான் முகக்கவசம் அணிந்து வந்ததால் அபராதம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் காவலர் உத்தரகுமார் என்பவரின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி  ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

காவல்நிலையத்தில் போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக  கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் அளித்துள்ள புகார் மனுவில்,  சம்பவத்தின்போது தான் முகக்கவசம் அணிந்து வந்ததாகவும் எனினும் அபராதம் கட்ட போலீசார் வற்புறுத்தியதாகவும் தனது வேலைஅடையாள அட்டையை காண்பித்தும் விடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் புகாரில் தெரிவித்தார்.

இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான  தலைமை காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திர குமார் ஆகிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.மேலும் காவல் ஆய்வாளர் நசீமா, ஆய்வாளர் ராஜன் உட்பட கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டது.இந்நிலையில் தற்போது சட்டக்கல்லூரி மாணவனை தாக்கியதாக கொடுங்கையூர் காவல்நிலைய போலீசார் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நசிமா, உத்திரகுமார், பூமிநாதன், ஹேமநாதன், சத்தியராஜ்,ராமலிங்கம், அந்தோணி ஆகியோர் மீது 143 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!