
மும்பை சிவாஜி பூங்காவில் பழம்பெரும் பின்னணி லதா மங்கேஷ்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முப்படை மற்றும் மகாராஷ்டிரா காவல் துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் கிட்டதட்ட ஒரு மாதம் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பிரதமர், குடியரசு தலைவர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் , திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சத்யா படத்தில் "வளையோசை கலகலவென." என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி இரண்டு நாள்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கபடும் என்று அரசு முழு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நாளை அரைநாள் விடுமுறையும் 15 நாட்களுக்கு பொது இடங்களில் லதா மங்கேஷ்கர் பாடல் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லதா மங்கேஷ்கர் இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல், மகாராஷ்டிரா வந்தடைந்த பிரதமர் மோடி மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா ஆளுநர், துணை முதலமைச்சர் சரத் பவார், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கோவா முதலமைச்சர் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மும்பை சிவாஜி பூங்காவில் பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் முப்படை மற்றும் மகாரஷ்டிரா காவல்துறை சார்பில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.