
திருவள்ளூர்
திருவள்ளூரில் தனியார் கிடங்கில் ரூ.10 இலட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலைப் பொருள்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியாருக்குச் சொந்தமான கிடங்கு ஒன்று உள்ளது. இதில் தடைச் செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவை அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு திருட்டுத்தனமாக விநியோகம் செய்யப்படுகிறது என்றும் மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மீஞ்சூர் காவலாளர்கள் தனியாருக்குச் சொந்தமான அந்த கிடங்குக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையின்போது அந்த கிடங்கில் 70 மூட்டைகளில் குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 இலட்சம் இருக்குமாம்.
இதனைத் தொடர்ந்து, அந்த குட்கா போதைப் பொருள்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். காவலாளர்கள் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட கிடங்கின் உரிமையாளர் தலைமறைவானார்.
அதனால், குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளரை தீவிரமாக காவலாளர்கள் தேடி வருகின்றனர்
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.