தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர்- மலர் தூவி வரவேற்பு

 
Published : Oct 19, 2016, 10:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர்-	மலர் தூவி வரவேற்பு

சுருக்கம்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையை வந்தடைந்தது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக, ஆந்திர அரசுகள் 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை உருவாக்கின. இந்த திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.

பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 11ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 200 கனஅடி வீதம்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை அதிகப்படுத்தும்படி தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கூடுதலாக 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியளவில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்ஜமின், எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், ஏழுமலை, விஜயகுமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சீனிவாச ராவ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மலர்தூவி கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. அதாவது 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 17.79 அடியாக பதிவானது. வெறும் 89 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர், பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் என்று மொத்தம் 64 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!