
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கோவில்பட்டி நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
36 வார்டுகளுக்கான தேர்தலில் மொத்தம் 227 பேர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் திமுக 21 இடங்கள், மதிமுக 6, மார்க்சிஸ்ட் 5, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன. அதிமுக 36, மக்கள் நீதி மய்யம் 11, நாம் தமிழர் 14, பாஜக 22, பாமக 2, அமமுக 33, பகுஜன் சமாஜ் 2, தேமுதிக 4, சமத்துவ மக்கள் கட்சி 2, தமிழ் பேரரசு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, புதிய தமிழகம் 2 மற்றும் அனைத்து வார்டுகளிலும் சேர்த்து 59 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மறைமுக தேர்தலில் கோவில்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மல்லிகா, அதிமுக கூட்டணியில் மதிமுகவைச் சேர்ந்த பவுன் மாரியப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் இருவரும் சரி சமமான வாக்குகள் பெற்றனர். இதையடுத்து குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டு, மல்லிகா தலைவராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கட்சிகள் நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க திவிரமாக களமிறங்கியுள்ளன.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவில்பட்டி பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கோவில்பட்டி நகராட்சியில் 25 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.