
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதிமுக கோட்டையாக கருதப்பட்ட கோவையில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 778 வேட்பாளர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 15 இலட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 8 இலட்சத்து 39 ஆயிரத்து 109 பேர் வாக்களித்தனர்.கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொத்தமுள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.தேர்தலுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது.இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடந்து கோவை மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகித்தது.
அதன்படி,கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 96 இடங்களை கைப்பற்றியது. இதில் திமுக 73 வார்டுகளில் வென்று உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 9 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றன. அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ கட்சி 1 வார்டிலும் வென்றன. திமுக கூட்டணி 96 இடங்களை கைப்பற்றியதை அடுத்து அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை மாநகராட்சி திமுகவின் வசம் வந்தது. மேலும் நகராட்சிகளில் மதுக்கரை,பொள்ளாச்சி, மேட்டுபாளையம், கருத்தம்பட்டி,காரமடை,வால்பாறை உள்ளிட்ட அனைத்து நகராட்சிகளையும் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.