போராட்ட களத்தில் புதிய நட்புகள் வேண்டாம் – கோவை கமிஷனர் அறிவுறுத்தல்

 
Published : Jan 24, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
போராட்ட களத்தில் புதிய நட்புகள் வேண்டாம் – கோவை கமிஷனர் அறிவுறுத்தல்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டபோது, அங்கு அவர்களுக்கு கிடைத்த புதிய நட்புகளுடன் பழக்கம் வேண்டாம் என கோவை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கேட்டு, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, லட்சக்கணக்கானோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில் மாணவர்களின் தொடர் போராட்டம் நடந்து வந்தது.

இதைதொடர்ந்து நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால், தடியடி நடத்தப்பட்டது.

இதையொட்டி பெரும் கலவரம் உருவானது. பல இடங்களில் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், பொதுமக்களையும் சரமாரியாக தாக்கினர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல் கோவையிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், கோவை மாநகர கமிஷனர் விமல்ராஜ், இன்று செய்தியாளார்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது. இதில், கலவரம் உருவாகி போலீசார் தடியடி நடத்தி, கலைய செய்தனர். இந்த சம்பவதில், சமூக விரோதிகள் பலர் உள்ளே நுழைந்துவிட்டனர். அவர்களின் தூண்டுதலின்பேரில் இந்த கலவரம் நடந்துள்ளது.

கோவை நகரில் 4000 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில், அனைத்து காட்சிகளும் பதிவாகி உள்ளன. இதை வைத்து, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானது அல்ல. அதை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற தகவல்களை பரப்புவதை குறைக்க வேண்டும். அப்படி தகவல் பரவுவதை குறைந்தால், குற்ற சம்பவங்களும் தடுக்கப்படும்.

குறிப்பாக மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே. நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, உங்களுடன் நட்பு கொண்டவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். மாணவர்களின் அமைதியான போராட்டத்தில், சிலர் ஊடுருவி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் சமூக விரோதிகள் மட்டுமல்ல தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இதனால், புதிதாக கிடைத்த நட்புகளுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். அதேபோல் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் நட்பு விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?