
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் இந்த பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. அப்போது காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, சந்தோஷ் சமி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், முதல் குற்றவாளியான கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்ற 10 பேரும், கைது செய்யப்பட்டனர். மேலும் கோடநாடு பங்களாவில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் ஆக பணிபுரிந்த வந்த தினேஷ் தற்கொலை செய்துக்கொண்டார்.
அரசியல் ஆதாயத்துக்காக இந்த குற்றச் சம்பவம் நடத்தப்பட்டதாகச் சர்ச்சைகள் எழுந்தன.கிட்டத்தட்ட தீர்ப்பு வழங்கும் நிலைக்கு எட்டிய இந்த வழக்கில் தற்போது கூடுதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கிய புலன் விசாரணை ஒரு மாதத்துக்கும் மேலாக பரபரப்புடன் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டிய கோடநாடு வழக்கு கடந்த ஆட்சியின் மாற்றத்திற்கு பின் மீண்டும் சூடுபிடித்தது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்கொலை செய்துக்கொண்ட தினேஷின் குடும்பத்தினர், சாலைவிபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் தனபால், ரமேஷ் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள வாளையார் மனோஜ், உதகையில் தனக்கு இருப்பிடமும், உணவும் கிடைக்கவில்லை என்பதால் தனது சொந்த ஊரான கேரளாவில் இருந்து வழக்கிற்கு ஆஜராக அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் ‘புலன் விசாரணை’ என்று கூறி அரசுத்தரப்பு வழக்கு விசாரணையை தங்கள் விருப்பத்திற்கு காலம் தாழ்த்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.இப்படியான சூழலில் தன்னுடைய ஜாமினை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறையில் அனுப்பக் கோரி இன்று அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை (வியாழக்கிழமை) விசாரிப்பதாக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.