
கொடநாடு காவலாளி கொலை வழக்கு சரியான பாதையில் விசாரிக்கப்படுவதாகவும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படாது எனவும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜ் மீது அபாண்டமாக பழி போடுவதாக அவரின் சகோதரர் குற்றசாட்டு எழுப்புவதாக தெரிகிறது.
இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கு சரியான பாதையில் செல்வதால் சிபிசிஐடிக்கு மாற்ற தேவை இல்லை என டிஜிபி டி.கே ராஜேந்திரன் தெவித்துள்ளார்.