புதுச்சேரி முதலமைச்சர் - ஆளுநர் இடையே வலுக்‍கும் மோதல்!

First Published Jan 6, 2017, 7:53 AM IST
Highlights


புதுச்சேரி முதலமைச்சர் - ஆளுநர் இடையே வலுக்‍கும் மோதல்!

புதுச்சேரி அரசு தொடர்புடைய வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் இருந்து, அரசு அதிகாரிகள் வெளியேற வேண்டும் என முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவை, துணை நிலை ஆளுநர் அதிரடியாக ரத்து செய்துள்ளார். இதனால், புதுச்சேரி முதலமைச்சருக்‍கும், துணை நிலை ஆளுநருக்‍கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது.

புதுச்சேரி அரசின் திட்டங்களை துரிதமாக செயல்படுத்த ஏதுவாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி, அனைத்து அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்த வாட்ஸ்-ஆப் குழுவை உருவாக்‍கி செயல்படுத்தி வந்தார். இக்‍குழுவில், P.C.S. அதிகாரியும், கூட்டுறவு சங்கப் பதிவாளருமான சிவக்‍குமார், ஆபாசப்படம் பதிவிட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவரை இடைநீக்‍கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, கடந்த 2-ம் தேதி அனைத்து ஐ.ஏ.எஸ்., P.C.S. அதிகாரிகளுக்‍கு, பணியாளர் நலத்துறை மூலம் அனுப்பட்ட சுற்றறிக்‍கையில், அரசு சார்புடைய வாட்ஸ்-ஆப் குழுக்‍கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார். மேலும், அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த சுற்றறிக்‍கையை ரத்து செய்து, நேற்று, துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி உத்தரவிட்டார். புதுச்சேரி அரசு பணியாளர் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்‍கை, தற்போது பின்பற்றப்படும் வழிகாட்டுதல்கள், விதிகள், கொள்கைகளுக்‍கு முரணாக உள்ளதால், அது செல்லாது எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்‍கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக, புதுச்சேரி முதலமைச்சருக்‍கும், துணை நிலை ஆளுநருக்‍கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

click me!