
நடிகை குஷ்பு வெளிநாடு செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் நடிகை குஷ்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தான் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நடிகை குஷ்பு தன் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.