
தமிழகத்தின் நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளும் ஏரிகளும் படிப்படியாக சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் இருந்த இடமே தெரியாமல் அழிந்துவிட்ட நிலையில், முக்கிய நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளை அழிக்கும் பணியை அரசு, தொழிற்சாலைகள், மக்கள் என அனைவரும் இணைந்து அவர்களால் செவ்வனே செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நொய்யல் ஆறு நுரை கலந்து ஓடியது. சாய சலவை ஆலைகளில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகள் கலந்ததால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்தன. மக்கள் சோப்பு போட்டு குளித்த கழிவுநீர் கலந்ததாலேயே ஆற்றுநீர் நுரை கலந்து ஓடுவதாக அமைச்சர் கருப்பண்ணன் விளக்கமளித்தார். அமைச்சரின் இந்த விளக்கம், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிகழ்வு நடந்து சில தினங்களே ஆன நிலையில், கிருஷ்ணகிரியில் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன நுரை பொங்கி வருவதால் விவசாயிகள் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பிறக்கும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக பாய்ந்து கடலூரில் கடலில் கலக்கிறது. இந்த 4 மாவட்டங்களுக்கும் தென்பெண்ணை ஆறு, நீராதாரமாக விளங்குகிறது.
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள்.
இவற்றில் கெலவரப்பள்ளி அணையில் தேக்கிவைக்கப்படும் நீர், அந்த சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் நீராதாரமாக விளங்குகிறது.
இந்த அணை கர்நாடகத்தில் பெய்யும் மழை நீரையே நம்பியுள்ளது. பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் ரசாயனங்கள் கலந்து வருவதால் இந்த நீரில் நச்சுத்தன்மை கலந்து காணப்படுகிறது. விவசாயத்திற்காகவும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் அந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் நுரை கலந்துவந்ததால் 1000 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. நுரை கலந்துவருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மக்களின் நீராதாரமாக விளங்கும் ஆற்றில் ரசாயன கழிவுகளை கலந்துவிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் தொழிற்சாலைகள் மீது அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆட்சியாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு தொழிற்சாலைகள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றன.
இதில் கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.