
வருகிற தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க தவறினால், எதிர்காலத்தில் அதிமுகவின் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். விழித்துக் கொள்ள வேண்டும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அதிமுகவை கடுமையாக சிதைக்க முதன்மையானவராக முயற்சிக்கிறார் விஜய், ஏற்கனவே பலர் திமுகவுக்கு சென்று விட்டார்கள், பாஜக ஒருபுறம் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிமுக வாக்கு வங்கியை தனதாக்கிக் கொள்ள முயன்றுகொண்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட, 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆண்ட அதிமுக செல்வாக்கு மிக்க தலைவர்களால் மிகப்பெரிய தொண்டர் பலத்தையும் வாக்கு வங்கியையும் கொண்டிருந்தது. அது தற்போது நிலை குலைந்து நிற்கிறது.
அதிமுக வாக்கு வங்கியை தனதாக்கிக்கொள்ள முயற்சி
விஜய் விக்கிரவாண்டி மாநாட்டின் போது அதிமுகவை தாக்கவில்லை என எடப்பாடி பெருமைப்பட்டுக் கொண்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி பேசும்போது எங்கள் தலைவர்களை புகழ்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். அப்பொழுதே சரியான அரசியல் புரிதல் இல்லாமல் அவருக்கு பதிலடி கொடுக்கத் தவறிவிட்டார். விஜய் திமுகவையும், பாஜகவையும் எதிரிகளாக்கி அதிமுகவை அட்ரஸ் இல்லாமல் செய்து அதிமுக வாக்கு வங்கியை தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்தார். என் (கே.சி.பி) போன்றோர்கள் மட்டுமே அன்றைக்கு விஜய்க்கு எதிராக பேசினார்கள். எடப்பாடியை சார்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் விஜய் கூட்டணிக்கு வருவார் என்கிற நம்பிக்கையிலேயே பயணித்தார்கள்.
உலகமகா ஊழல் அதிமுக
மாநாட்டில் விஜய் உலகமகா ஊழல் கட்சி என்ற பழியை அதிமுக மீது சுமத்தி இருக்கிறார், அடிமைகள் என்று EPS & Coக்களை வறுத்தெடுத்திருக்கிறார். ஆனால் நேற்றும் கூட எடப்பாடி சரியான எதிர்வினை ஆற்றவில்லை. கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வர முடியாது என்று வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
எதிர்வினை ஆற்றத் தெரியவில்லையா?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சி துவங்கியவுடன் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் முதற்கொண்டு தொடர்ச்சியாக வந்த எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். என்.டி.ராமா ராவ் கட்சியை துவங்கியவுடன் ஆட்சியைப் பிடித்தார். ஆம் ஆத்மி கட்சியும் அப்படி தான் வந்தது இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. விஜய் மாநாட்டின் முகப்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அறிஞர்_அண்ணா படங்களை வைத்த போது என் (கே.சி.பி) போன்றவர்கள் மட்டுமே அதை எதிர்த்து பேசினோம். ஆனால் எடப்பாடி எதுவும் சொல்லாமலே இருந்தார். அவருக்கு எதிர்வினை ஆற்றத் தெரியவில்லையா? அல்லது பயப்படுகிறாரா?
எடப்பாடி அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்
இன்றைய சூழலில் 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க இன்னும் சுமார் 200 நாட்களே உள்ளன. இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை அதிமுக ஆள வேண்டும் என்று நினைக்கிற அதிமுக தொண்டர்களையும், தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக் கொடுத்து அதிமுக ஆள வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியில் "கடந்த கால கசப்புகளை மறப்போம் எதிர் காலத்தில் ஒருங்கிணைந்து பயணிப்போம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி உருவாக்குவோம்" என்கிற ஒற்றைப் புள்ளியில் எடப்பாடி அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
விட்டுக் கொடுத்த செயல்பட வேண்டும்
அதிமுக ஒன்றுபட்டு இல்லாத காரணத்தினாலும், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், சசிகலா, தினகரன், வேலுமணி, முனுசாமி போன்றவர்கள் மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக சாதிய அரசியல் செய்கிற காரணத்தினாலும், இவர்கள் பெரிய அளவு ஊழல் செய்ததாலும் இன்று பாஜக அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. திக்குத் தெரியாத காட்டில் தத்தளிக்கிற நிலையில் தொண்டர்கள் இருக்கிறார்கள். வருகிற தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க தவறினால், எதிர்காலத்தில் அதிமுகவின் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். விழித்துக் கொள்ள வேண்டும், ஒன்றுபட வேண்டும், விட்டுக் கொடுத்த செயல்பட வேண்டும் இதை இப்பொழுதாவது எடப்பாடி உணர்வாரா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.