பச்சை நிறத்தில் காவிரி தண்ணீர் – பொதுமக்கள் அதிர்ச்சி

First Published Nov 15, 2016, 12:01 AM IST
Highlights


காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீர் பச்சை நிறத்துடன் காணப்படுவதால் பவானி, காவிரியின் கரையோரப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது பவானியில் இரு கரையையும் தொட்டபடி நீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது, அணையில் நீர் இருப்பு குறைந்ததால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

அணையில் இருந்து குறைந்த அளவிலேயே ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீரோட்டம் குறைந்துள்ளதோடு, பெரும்பாலும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் பச்சை நிறத்தில் பாசிகள் கலந்து காணப்படுவதால் கரையோரப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பவானி, குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர் உள்பட நெரிஞ்சிப்பேட்டை வரையில் இவ்வகை படிவங்கள் காணப்படுகிறது. காவிரிக் கரையோரத்தில் தண்ணீரில் கலந்து பச்சை நிறத்தில் அடர்த்தியாகக் காணப்படும் இப்படிவங்களால் துர்நாற்றம் வீசுவதாகவும், ஆற்று நீரில் துணிகளைத் துவைக்கவோ, குளிக்கவோ முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், குறைந்த அளவே செல்லும் தண்ணீரில் அதிகளவில் கழிவுகள் கலப்பதும் இவ்வகையான பச்சை நிறத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக தண்ணீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வேளையில், பச்சை நிறத்தில் தண்ணீர் காணப்பட்டு வருவது அதிர்ச்சியையும், பல்வேறு தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!