
சென்னையில் பெரிய பணக்காரர்கள் , பைனான்சியர்கள் கருப்பு பணமுதலைகள் வெகு சுலபமாக கருப்பு பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அரசு இதை தடுக்குமா?
1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் இன்றுவரை பெரிய பிரச்சனையில் சிக்கி தடுமாறி வருகிறார்கள் ,. பொதுமக்கள் வசதிக்காக வங்கியில் முதல் நாளில் ரூ.2000 மற்றும் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் ரூ.4000 செல்லாத நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுகொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை உங்கள் ஆதார் அட்டை அல்லது எதாவது ஒரு அடையாள அட்டையை கொடுத்து பணத்தை மாற்றிகொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து சென்னை முழுதும் தினமும் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
பொதுமக்கள் ரூபாய் தாள்களை மாற்ற மிகவும் சிரமப்படுகின்றனர். சென்னையில் கடந்த 6 வது நாளாக பொதுமக்கள் கூட்டம் வங்கியில் அலைமோதுகிறது. ஏன் இப்படி கூட்டம் அலைமோதுகிறது என்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
வங்கியில் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் எத்தனை நாளைக்கு வங்கிக்கு சென்று நோட்டுகளை மாற்றினீர்கள் என்று கேட்டார்,. என்னிடம் என்ன 8000 ரூபாய் இருந்தது . அதில் பெட்ரோல் போட்டேன், செலவழிக்க முடிந்த் இடங்களில் செலவு செய்தேன். 4000 ரூபாயை வங்கிக்கு கொண்டு சென்று மாற்றினேன் என்றேன்.
அதற்கு அடுத்த நாட்களுக்கு எல்லாம் போகவில்லையா என்று நண்பர் கேட்டார். எதுக்கு போகணும் என்னிடம் பணம் இருந்தால் தானே. அப்படியே அதிகம் இருந்தால் கியூவில் போய் ஏன் நிற்கணும் ஏடிஎம்மில் எனது பெயரில் டெபாசிட் செய்துவிட்டு மெதுவாக ஏடிஎம்மில் எடுக்கப்போகிறேன் என்றேன்.
அதுதானே நடைமுறை அப்படி இருக்கும் போது வங்கியில் இவ்வளவு கூட்டம் அலைமோத என்ன காரணம் என்று கேட்டார் நண்பர். அவ்வளவு பேருக்கு பிரச்சனை இருக்கு என்றேன் அப்பாவியாக. அவர் சிரித்தார் கேலியாக , ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டேன்.
சார் எனக்கு தெரிந்து சாதாரண குடிசை பகுதியில் வசிக்கும் ஒரு ஏழை கூலி வேலை செய்யும் குடும்பம் தினமும் 4000 ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து மாற்றி செல்கிறார்கள், குடும்பத்தில் நான்குபேர் உள்ளனர். நாலுபேரும் அடையாள அட்டையை காட்டி 16000 மாற்றி செல்கின்றனர். அப்படியானால் அவர்களுக்கு தினமும் 16 ஆயிரம் லிக்யூட் கேஷ் தேவைப்படுகிறதா ?
தினமும் 16 ஆயிரம் ரூபாய் மாற்றி செலவழிக்கும் அளவுக்கு வசதியானவர்களா? என்று கேட்டார். நான் திணறிப்போனேன். அப்படியானால் என்ன தான் நடக்குது என்றேன். அரசாங்கம் என்னதான் மாற்றம் கொண்டு வந்தாலும் அதையும் மாற்றி அதிலும் காசு பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் , இவர்கள் தான் விஷக்கிருமிகள் இவர்கள் காசுக்காக எதையும் செய்வார்கள் என்று சொன்னார்.
விளக்கமாக சொல்லுங்கள் என்று கேட்டவுடன் அவர் சொன்னதை கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்கிறார்கள் ஆனால் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் கருப்பு பணம் சாதாரண ஏழை மக்களை பயன்படுத்தி வெள்ளைப்பணமாக மாற்றப்படுகிறது தெரியுமா. சாதாரணமாக வங்கிகளில் மாற்றப்படும் பணத்தில் 70% மேல் கருப்பு பணமுதலைகளின் பாக்கெட்டுக்குதான் போகிறது தெரியுமா என்றார்.
என்னங்க இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய்கள் சாதாரணமாக வெள்ளையாகி கொண்டிருக்கிறதே வேறு எப்படி சொல்லமுடியும் என்று கேட்டார்.
விளக்கமாக சொல்லுங்கள் என்று கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார். திடீரென பணம் செல்லாது என்று அறிவித்தவுடன் கருப்பு பணத்தை கத்தை கத்தையாக வைத்திருந்தவர்கள் ஆடித்தான் போனார்கள்.
அவர்களுக்கு அப்போதுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதுதான் வங்கியில் அடையாள அட்டையை மட்டும் காட்டி யார் வேண்டுமானாலும் பணத்தை மாற்றி கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இதற்காக உள்ள புரோக்கர்கள் கிளம்பினார்கள்.
ஒவ்வொரு குடிசைப்பகுதிகள் , ஆட்டோடிரைவர்கள் , கூலிவேலை செய்பபவர்கள், வேலையில்லா இளைஞர்கள் , இல்லத்தரசிகள் தான் இவர்கள் இலக்கு. 4 ஆயிரம் ரூபாய் மாற்றிக்கொடுத்தால் 500 ரூபாய் கமிஷன். ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் வேலைக்கு போகமாலேயே வங்கி வாசலில் கியூவில் நின்று ரூ.2500 ரூபாய் ஒரு குடும்பம் எளிதாக சம்பாதிப்பதிக்கிறது.
இப்படி சென்னை முழுதும் மட்டுமல்ல தமிழகத்தின் முக்கிய நகரங்களில் புரோக்கர்கள் மூலம் இப்படி கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுகிறது. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் ரெகுலராக பணத்தேவைக்கு வருபவர்கள் 30% தான் இருப்பார்கள். இது போன்ற கருப்புப்பணத்தை மாற்றுபவர்கள் தான் மீதியுள்ள 70% இதை ஏனோ வருமான வரித்துறையினர் கண்டுக்கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார் .
ஒவ்வொரு வங்கி வாசலிலும் , ரிசர்வ் வங்கி வாசலிலும் இது போன்ற புரோக்கர்களை இன்று போனால் கூட பார்க்கலாம். இதுவரைக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் இப்படி வெள்ளையாக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஊசியில் போன அவன் நூலில் போவான் என்று கிராமத்து பழமொழி ஒன்று உண்டு இதுக்கு அது பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.